Wednesday, 20 July 2011

தேநீர் விடுதி விமர்சனம்

பூ, களவாணி படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயா‌ரித்து இயக்கியிருக்கும் படம். குமரன் இசையமைத்தப் படங்கள் பாடல்களுக்காகப் பேசப்பட்டதும், தேநீர் விடுதி குறித்த அவரது நம்பிக்கையான பேட்டிகளும் தேநீர் விடுதி மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன.


WD
ஒரு கிராமம். அதில் பந்தல் போடும் வேலை பார்க்கும் இரு சகோதரர்கள். அவர்களில் இளையவனுக்கு எதிர்பாராமல் வரும் காதல் மற்றும் காதலியின் குடும்பத்து எதிர்ப்பு, இறுதியில் எதிர்ப்பை மீறி திருமணம்... கதையில் எந்த சுவாரஸியமுமில்லை. ச‌ரி,எடுத்திருக்கும்விதம்?

இதில்தான் சோதனையே. ஒரு காட்சியை எப்படி கம்போஸ் செய்வது என்ற அடிப்படையே இயக்குனருக்கு‌த் தெ‌ரியவில்லை. கேமரா முகத்துக்கு நேராக வந்ததும் சுவிட்ச் போட்ட மாதி‌ிஎல்லோரும் திடுக்கிட்டு நடிக்க‌த் தொடங்குகிறார்கள். காட்சிகளை எடுத்திருக்கும் விதம் படு செயற்கை. 

ஒரு கதாபாத்திரம் ஃபோனில் பந்தல்காரனுடன் பேச வேண்டும். இந்தக் காட்சியை இயக்குனர் எப்படி எடுத்திருக்கிறார் பாருங்கள். ஃபோனில் பேசும் முன் கையிலிருக்கும் விசிட்டிங் கார்டைப் பார்த்து, ம்... பந்தல்காரனுக்கு ஃபோனைப் போடுவோம்... ரொம்ப நல்லா பந்தல் போடுவானுங்க என்று அந்த கதாபாத்திரம் உரக்க சொல்லிக் கொண்டு தனக்குத்தானே தலையாட்டிக் கொள்ளும். என்ன கொடுமை இது? இதேபோல் படம் நெடுக அபத்தங்கள் விரவிக் கிடக்கின்றன. 

ஹீரோ ஆதித்துக்கு குச்சு மிட்டாயும், குருவி ரொட்டியும் திங்கிற முகம். எந்தக் காட்சியிலும் இந்த முகத்தை அவர் மாற்றவேயில்லை. நாயகி ரேஷ்மி அழகாக இருக்கிறார். நடிப்பும் வருகிறது. ஆனால் எல்லாமே பிளாஸ்டிக் காட்சிகள். எப்படி நடிப்பது?

ஹீரோ முதலில் நாயகியின் தந்தையை குடிக்க வைக்கிறான், பிறகு நாயகி வயதுக்கு வந்ததாக பந்தல் போடுகிறான். நாயகிக்கு நாயகன் மேல் கடும் கோபம். அவனை துரத்திப் பிடித்து அடிப்பார் என்று பார்த்தால் வெட்கத்துடன், நான் வயசுக்கு வந்திட்டேன்னு எப்பிடி தெ‌ரியும் என்று கேட்கிறாள். இதே போல் படத்தில் வரும் அனைவரும் ஏதோ ஒன்று கழண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

அமெ‌ரிக்க மாப்பிள்ளை என்று ஒருவரை காட்டுகிறார்கள். கடவுளே... தமிழ் திரையுலகம் பார்க்காத கேரக்டர். அதையே கிளைமாக்ஸ் வரை அவ்வப்போது காட்டி கதற வைக்கிறார்கள். பத்தாவது காட்சியில், என்னை அவமானப்படுத்திட்டேயில்லை என்று சீறும் கதாபாத்திரம் அத்தோடு தொடர்புவிட்டு போய் கிளைமாக்ஸில், உன்னையும் அவமானப்படுத்துறேண்டா என்று மீசை தடவும் போது நம்ம ஜட்‌ஜ்மெண்ட் தப்பு என்பது உறுதியாகிவிடுகிறது.

நாயகியின் தந்தை தன்னை கொளுத்துவதுக்குப் பதில் பந்தலை கொளுத்துவதும், நாயகன் திடீரென மலைக்கு மாலை போடுவதும் அதிர்ச்சிகரமான திருப்பங்களாக இயக்குனர் நினைத்தால் அய்யோ பாவம்... நீங்க டெண்ட் கொட்டாயைவிட்டே இன்னும் வெளியே வரலை.

படத்தின் பின்னணி இசை எந்தவொரு காட்சியிலும் சிங்க் ஆகாமல் தனித்தே ஒலிக்கிறது. பாடல்கள் மட்டும் கேட்கலாம் ரகம். பூ படத்தின் சூ‌ச்சூ மா‌ி பாதிப்பால் இரண்டு பாடல்களில் தேவையேயில்லாமல் சிறுவர்களை பாட விடுவது பெரும் வதை.

சினிமா என்பது கலை. அதன் சிரசு இயக்கம். இரண்டு படங்களுக்கு இசையமைத்த தகுதியில் படம் இயக்கும் திறமை வந்துவிட்டதாக நினைத்தால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதற்கு இப்படம் சான்று.