நடிகர்கள்:ஆர்யா,விஷால்,மதுசாலினி,ஜனனி ஐயர்.
இயக்கம்: பாலா
இசை : யுவன்
தயாரிப்பு : கல்ப்பாத்தி அகோரம்
திருட்டு தொழில் செய்யும் எதிரும் புதிருமான இரு சகோதரர்கள் கதை.
ஒரு தந்தை இரு தாய்க்கு பிறந்த அண்ணன், தம்பிகள் விஷால்- ஆர்யா. இருவரும் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். அதே பகுதியில் வசிப்பவர் ஜி.எம்.குமார். சூழ்ச்சியில் சொத்துக்களை இழந்த அப்பாவி ஜமீன்தார். அவர் மேல் இரு சகோதரருக்கும் மரியாதை.
விஷாலுக்கு நடிப்பில் ஆர்வம். மேடை நாடகங்கள் நடத்துகிறார். உள்ளூர் பெண் போலீஸ் ஜனனி அய்யர் மீதும் காதல் வயப்படுகிறார். அடி மாடுகளை இறைச்சிக்காக கடத்தும் ஆர்.கே.வை ஜி.எம். குமாரும், ஆர்யாவும் போலீசில் பிடித்து கொடுக்கின்றனர்.
விடுதலையாகும் ஆர்.கே. வெறியாகி ஜி.எம்.குமாரை கொன்று பிணத்தை மரத்தில் தொங்க விடுகிறார். அவரை விஷால், ஆர்யா பழி தீர்ப்பது கிளைமாக்ஸ்…. திருட்டு, குடி, கும்மாளம் என திரியும் அழுக்கு மனிதர்கள் வாழ்வியலை யதார்த்தமாய் பதிவு செய்துள்ளார் இயக்குனர் பாலா. ஒற்றைக் கண்ணுடன் நவரசங்களை புழிந்து விஷால் நிறைய மெனக்கெட்டுள்ளார். அரை டிரவுசரில் சுருட்டு பிடிக்கும் அம்மா, தனது நலன் பேணும் ஜமீன்தாருக்கு அடங்கு பவராகவும் பெண் வேட மிட்டு திருட போய் செண்டிமென்ட் பார்த்து வெறும் கையுடன் திரும்பும் அப்பாவியாகவும் மனதில் பதிகிறார்.
ஜி.எம்.குமார் உடலை பார்த்து வெறி பிடித்து அலறி ஆர்.கே.யை சகதிகளில் போட்டு அடித்து துவைப் பதில் ஆவேசம். ஆர்யா காமெடி திருடனாக கலகலப்பூட்டுகிறார். சாவியை தொலைத்த நீதிபதிக்கு பீரோவை கள்ளச்சாவி போட்டு திறந்து உதவுவதுடன் அவர் காரிலேயே குப்பத்தில் ஸ்டைலாக வந்து இறங்குவது சிரிப்பு சரவெடி.
விஷால் மேல் வெளியே கோபமும் உள்ளுக்குள் பாசமும் காட்டி தொடுகிறார். ஜமீன்தாராக வரும் ஜி.எம்.குமார் வலுவான பாத்திரம். மாடுகளை இறைச்சிக்கு கடத்தும் ஆர்.கே. கொடூர வில்லன். ஜி.எம்.குமாரை நிர்வாணப்படுத்தி கொன்று அதிர வைக்கிறார்.
ஜனனி அய்யரும், மதுஷாலினியும் காதலிகளாக வருகின்றனர். யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம். பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு பிரமாண்டம். காட்சி அமைப்புள், கதாபாத்திரங்கள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. கதையோட்டத்தில் அழுத்தம் இல்லை. அறுவெறுப்பு வசனங்களை தவிர்த்து இருக்கலாம். மாடு கடத்தலுக்கு பின்கதை விறுவிறுப்புக்கு மாறுகிறது.